2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகள், உயரிய விருதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்தாண்டு பத்ம விருதுகள் பெறும் நபர்களின் பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 6 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழகத்தை சேர்ந்த பிரபல பழம்பெரும் பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி’ என்று அழைக்கப்படும் இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். தமிழில், மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு சுவரங்களுக்குள், ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன், ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி, இசை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் வாணி ஜெயராம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக சேவைக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி நிபுணர்களான வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோரும், பாலம் கல்யாண சுந்தரமும் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலைப்பிரிவில் கல்யாண சுந்தரம் பிள்ளைக்கும், மருத்துவப் பிரிவில் மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமிக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் நளினி பார்த்தசாரதிக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.