அதிமுக பொதுச்செயலாளர் அங்கீகாரம் கோரியும், இரட்டை இலை சின்னம் கோரியும் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். முன்னதாக இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் தரப்பிலும், தேர்தல் ஆணையம் தரப்பிலும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இருவர் தரப்பிலும் பதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக ஓபிஎஸ் தரப்பில் எடப்பாடியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் தரப்பில் எடப்பாடி பழனிசாமியை இன்னும் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக தேர்தல் அலுவலர் முடிவை எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணை தொடங்கி நடைபெறுகிறது. இதில், இப்போது உள்ள நிலைமைப்படி பார்த்தால் இரு தரப்பினரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இருவரும் சேர்ந்து வேட்பாளரை அறிவித்தால் கட்சி விண்ணப்பத்தில் நான் கையெழுத்திட தயார் பன்னீர்செல்வம் தரப்பு கூற, இது நல்ல யோசனையாக இருக்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். எங்கள் தரப்பு அறிவிக்கும் வேட்பாளரை ஓபிஎஸ் ஏற்க வேண்டும் என பழனிசாமி தரப்பு வாதிட்டனர். பொது வேட்பாளரை தான் ஏற்க முடியும் என பழனிசாமி தரப்புக்கு ஓபிஎஸ் தரப்பு பதில் கொடுத்துள்ளது. இப்படி மாறி மாறி வாதம் பிரதிவாதம் செல்ல, இருவரும் கையெழுத்து போட வேண்டும். எங்களிடம் விட்டுவிடுங்கள். நாங்கள் உத்தரவு பிறப்பிக்கிறோம் என கடுப்பான நீதிபதிகள், வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்யும் எனக்கூறி, அதிமுக பொதுக்குழுவை கூட்ட உத்தரவிட்டனர்.