16 வயது மாணவியை கர்ப்பம் ஆக்கிய நபரை தர்மபுரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் பொரத்தூர் பகுதியைச் சார்ந்த முத்து என்பவர் மகன் கவியரசன் வயது 20. இவரும் அதே ஊரைச் சார்ந்த பதினோராவது வகுப்பு மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்று ரகசியமாக திருமணம் செய்துள்ளனர் .
கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டே இவர்கள் குடும்பம் நடத்தி ஒன்றாக வாழ்ந்திருக்கின்றனர் . இதனைத் தொடர்ந்து மாணவி கர்ப்பமடைந்துள்ளார். இதனை அடுத்து அந்த இளைஞர் மாணவியை கூட்டிக் கொண்டு வந்து தர்மபுரி பேருந்து நிலையத்தில் தவிக்க விட்டு விட்டு இவர் தப்பிச் சென்றுள்ளார் . இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற மாணவி தனது பெற்றோரின் உதவியை நாடி இருக்கிறார் . அவர்கள் வந்து மாணவியிடம் விசாரித்த போது இவர் கர்ப்பமாக இருக்கும் விசயம் தெரிந்திருக்கிறது .
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர் மாணவியின் பெற்றோர். இந்தப் புகாரை விசாரித்த காவல்துறையை மாணவியிடம் விவரங்களை கேட்டறிந்து அந்த இளைஞரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மாணவியை பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்ற இளைஞரை பிடித்து சிறையில் அடைத்தது காவல்துறை.
16 வயது மாணவியை காதலித்து கர்ப்பம் ஆக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுத்த காவல்துறையை அந்தப் பெண்ணின் பெற்றோர் பாராட்டினர்.