சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, பிரதமர் நரேந்திர மோடி, உலகத் தலைவர்களின் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்..
Morning consult என்ற ஆய்வு நிறுவனம் ஜனவரி 26 முதல் 31 வரை நடத்திய ஆய்வில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் உட்பட 22 உலகத் தலைவர்கள் இடம்பெற்றுள்ள தரவரிசையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். 78 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டுடன் மோடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.. இந்த தர வரிசைப்பட்டியலில் மெக்சிகோ அதிபர், லோபஸ் ஒப்ரடோர் 68% ஒப்புதல் மதிப்பீட்டுடன் 2-வது இடத்தில் உள்ளார்.. 58 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டுடன் ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் 3-ம் இடத்தை பிடித்துள்ளார்..
இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி 52 சதவீத மதிப்பீட்டில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளார். பிரேசில் அதிபர், டி சில்வா 50 சதவீத அங்கீகாரத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் 40% என்ற மதிப்பீட்டில் 6-வது மற்றும் 7வது இடங்களில் உள்ளனர்.
ஸ்பெயின் பிரதமர் 36% மதிப்பீட்டுடன் 8-வது இடத்திலும், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் 32% மதிப்பீட்டுடன் 9-வது இடத்திலும், 30% மதிப்பீட்டுடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 10-வது இடத்திலும் உள்ளனர்..
வாஷிங்டைனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், Morning consult என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம், உலகம் முழுவதும் மாறிவரும் அரசியல் நிகழ்வுகள் பற்றிய நிகழ்நேர நுண்ணறிவை ஆய்வு செய்து வருகிறது. அதில் உலகத் தலைவர்களின் தலைமைப் பண்பு, மக்கள் செல்வாக்கு ஆகியவை குறித்து ஒவ்வொரு நாட்டிலும் வயது, பாலினம், அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.. மேலும் சில நாடுகளில், அதிகாரப்பூர்வ அரசாங்க ஆதாரங்களின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்புகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..