ஐடி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓட்டலில் தங்கவைத்து இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புரோக்கரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் (எ) கார்த்திகேயன். சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கார் டிரைவராக பணியாற்றி வரும் இவன், ஆன்லைன் மூலம் தான் பிரபல ஐடி நிறுவனங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் மேலாளராக இருப்பதாகவும், தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற அடிப்படை சம்பளம் ரூ.50 ஆயிரம் என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளார். அதன் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கும் வடமாநில இளம்பெண்களை, கார்த்திகேயன் ஆன்லைன் மூலமே நேர்காணல் நடத்தி தேர்வு செய்துள்ளார். அப்படி தேர்வு செய்யப்பட்ட இளம்பெண்களை சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்துள்ளார்.
மேலும், சினிமாவில் நடிக்கவைப்பதாக ஆசை வார்த்தை கூறி புகைப்படங்களை எடுத்து வைத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி மேலும் சில புரோக்கர்கள் மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரை இளம்பெண்களை விற்பனை செய்துவந்துள்ளார். இதையடுத்து கார்த்திகேயனால் பாதிக்கப்பட்ட சில பெண்கள், காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு இ-மெயில் மூலம் புகார் அளித்துள்ளனர். புகாரின்படி, நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவின் விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த கார்த்திகேயன், தனது மனைவியை பார்க்க கொரட்டூருக்கு வந்தபோது போலீசார் அவனை கைது செய்தனர். மேலும், கார்த்திகேயன் மீது சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பாலியல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது