தனது தந்தையின் செல்போனை வாங்கி, வகை வகையான உணவு வகைகளை 6 வயது சிறுவன் ஆர்டர் செய்த சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது.
அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியைச் சேர்ந்தவர் கெய்த் ஸ்டோன்ஹவுஸ். இவரது மனைவி கிறிஸ்டின் தன்னுடைய நண்பர்களுடன் படம் பார்க்க சென்றதால் 6 வயது மகனான மேசனை தந்தை கவனித்துக்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். அப்போது மகன் கேம் விளையாட கேட்டதால் தன்னுடைய ஃபோனை கொடுத்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து கெய்த்தின் வீட்டுக்கு காரில் வந்தவர் காலிங் பெல் அடித்து கெய்த்திடம் சிக்கன் சாண்ட்விச்செஸ், ஷ்ரிம்ப், ஐஸ் க்ரீம் மற்றும் 12 சில்லி ஃப்ரைஸ் பார்சலை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இது குறித்து Ladbible செய்தி தளத்திடம் பேசியிருக்கும் கெய்த், “என்னுடைய மனைவி கேக் பேக்கரி வைத்திருக்கிறார். கல்யாண வாரம் என்பதால் எவரோ சில அலங்காரப் பொருட்களை அனுப்பியிருக்கிறார்கள் என நினைத்தேன். ஆனால் இது Leo’s Coney Island-ல் (அமெரிக்காவின் பிரபல உணவகம்) இருந்து வந்திருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “மீண்டும் காலிங் பெல் அடிக்கவே போய் பார்த்தேன். அதேபோல ஒன்றன் பின் ஒன்றாக காரில் வந்து ஆர்டரை டெலிவரி செய்துவிட்டு போனார்கள். கடைசியில் ஒருவரிடம் என்ன டெலிவரி செய்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு நாங்கள் சிக்கன் ஷவர்மா ஆர்டர் செய்தாக கூறினார். அப்போது ஒன்றுமே புரியவில்லை.” “உடனே என்னுடைய மொபைலை எடுத்து பார்த்தேன். அதில் வரிசையாக ஆர்டர் செய்யப்பட்டது தயாராகிக் கொண்டிருப்பதாகவும், வந்துக் கொண்டிருப்பதாகவும் நோட்டிஃபிகேஷன் காட்டியுள்ளது. வங்கி கணக்கை பார்த்தால் எல்லாம் பணமும் காலியாகியிருக்கிறது. அப்போதான் புரிந்தது மேசன்தான் இதை செய்திருக்க வேண்டுமென.
அவனிடம் சென்று நீ என்ன செய்தாய் என கேட்டேன். ஆனால் அதுதான் எனக்கு சிரிப்பையே வரவைத்தது. நீ செய்தது சரியே இல்லையென விளக்க முயன்றேன். ஆனால் அவன் தன் கையை தூக்கிக்கொண்டு நான் பேசுவதை நிறுத்திவிட்டு, “அப்பா, அந்த பெப்பெரொனி பிட்சா இன்னும் வரலையா?” என கேட்டான். இதை கேட்டதும் எனக்கு சிரிப்பதா இல்லை கோபப்படுவதா என்று தெரியவில்லை” என்று தந்தை கெய்த் தெரிவித்தார். ஒருகட்டத்தில் 183 டாலருக்கான பிட்சா ஆர்டருக்காக 439 டாலர் குறைந்திருப்பதாக வங்கியில் இருந்து எஸ்.எம்.எஸ். வந்திருக்கிறது. மேலும் நிறைய ஆர்டர் செய்தற்காகவும், பிட்சா ஆர்டருக்கான பணம் decline ஆனதால் grubhub நிறுவனம் கெய்த்திற்கு 1000 டாலருக்கான Voucher கொடுத்திருக்கிறது. கெய்த்தின் மகன் மேசன் ஆர்டர் செய்த மொத்த உணவுகளின் விலை 1000 அமெரிக்க டாலர்கள். அதாவது 80,000 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.