திருவண்ணாமலையை அடுத்த கண்ணமடை காப்புக்காடு பகுதியில் பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தீவிரமான விசாரணையையும் மேற்கொண்டு வந்தனர். ஒரு பெண்மணி எதற்கு இந்த காட்டுப் பகுதிக்கு தனியாக வந்தார் அவர் கொலை செய்யப்பட்டாரா?இல்லை அவரை யாரும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா ?என்ற ரீதியில் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையின் விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் திருவண்ணாமலையைச் சார்ந்த விஜயா என்பது தெரிய வந்திருக்கிறது. அவருக்கு வயது 65. விஜயாவை யார் கொலை செய்திருப்பார்கள் என்ற ரீதியில் காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். அப்போது விஜயாவின் வீட்டில் தங்கி இருந்த காஞ்சனா என்பவரின் மீது காவல்துறையின் சந்தேகம் திரும்பியது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் தனது காதலனுடன் சேர்ந்து விஜயாவை கொலை செய்ததை ஒத்துக் கொண்டிருக்கிறார். கணவனை இழந்த காஞ்சனா விஜயாவின் வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்திருக்கிறார். அப்போது அவருக்கு ஆட்டோ டிரைவர் ஞானவேல் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் விஜயாவின் வீட்டிலேயே தங்கி இருந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இவர்களிடம் வாடகை கேட்டு தொந்தரவு செய்து இருக்கிறார் விஜயா. இதன் காரணமாக அவரை கொலை செய்தால் வாடகை தொல்லை இருக்காது மேலும் அவரிடம் இருக்கும் 100 பவுன் நகையையும் எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டத்துடன் மூதாட்டி விஜயாவை தலையில் பலமாக தாக்கி கொலை செய்திருக்கின்றனர் ஞானவேலுவும் காஞ்சனாவும். பின்னர் அவரது சடலத்தை ஞானவேலுவின் ஆட்டோவில் ஏற்றி காப்பு காட்டு பகுதிக்கு கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தி இருக்கின்றனர். இந்த சம்பவங்கள் காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தது. நகைக்கு ஆசைப்பட்டு கள்ளக்காதல் ஜோடி மூதாட்டியை கொன்ற சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.