நாகர்கோவில் அருகே சவாரிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாகர்கோவில் ராமன் புதூர் பகுதியைச் சார்ந்தவர் கிறிஸ்துராஜ். ஆட்டோ ஓட்டுநராக இருந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவாரி செல்வதாக வீட்டில் கூறி விட்டு வெளியே சென்று இருக்கிறார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள தோட்டத்தில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார் கிறிஸ்துராஜ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 24ஆம் தேதி சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார் .
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கிறிஸ்துராஜின் குடும்பத்தினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தீவிரமான தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வடக்கு கோணத்தைச் சார்ந்த அருண்குமார் மற்றும் அவரது தந்தை தங்கராஜ் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் கிறிஸ்துராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் காவல்துறையின் விசாரணையில் மது குடிப்பதற்காக கிறிஸ்துராஜை சவாரிக்கு அழைத்து சென்றதாகவும் அப்போது அவரிடம் அதிகமாக பணம் இருப்பதை அறிந்து அதனைத் திருட திட்டம் தீட்டி அவரை தாக்கியதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் அவரைக் கொல்ல வேண்டும் என்று எண்ணத்தில் தான் தாக்கவில்லை எனவும் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் அருண்குமார். தாக்குதலின் போது கிறிஸ்துராஜ் மயக்கமடையவே அவரிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தனது தந்தையுடன் பைக்கில் தப்பி சென்றதாகவும் தெரிவித்திருக்கிறார். அருண்குமாரையும் அவரது தந்தை தங்கராஜையும் கைது செய்துள்ள காவல் துறை அவர்களை சிறையில் அடைத்தது.