சென்னையில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்பட்டு வரும் செலவுகளைக் குறைக்கத் தனியார் பேருந்துகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது.
சென்னை மாநகர பேருந்து கழக அதிகாரிகளிடம் விசாரித்த போது, சென்னையில் மொத்தம் 1000 பேருந்துகளைத் தனியார் சேவையாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.இந்த பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் அறிமுகம் செய்யப்படும் எனவும், கிலோ மீட்டர் கணக்கில் அவர்களுக்குக் கட்டணம் பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் உலக வங்கி, சென்னை மாநகர கூட்டணியின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 2023-ம் ஆண்டு இறுதிக்குள் 500 பேருந்துகளும், 2025-ம் ஆண்டுக்குள் 500 பேருந்துகள் என மொத்தம் 1000 பேருந்துகள் தனியார் சேவையாகச் சென்னையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தனியார் பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டால், மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச பஸ் பாஸ் திட்டம் மற்றும் பெண்களுக்கு மாநகர பேருந்துகளில் வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பேருந்து சேவைகள் பாதிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வரும் மாநகர போக்குவரத்துக் கழகம், இந்த தனியார் பேருந்து சேவைகள் வந்தால் செலவுகள் குறைந்து நட்டத்திலிருந்து மீளும் எனவும் கூறப்படுகிறது.