முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி உள்ளிட்டவைகளுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் முன்னோடி திட்டமும் இடம்பெறவுள்ளது.
சட்டப்பேரவையில் வரும் மார்ச் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதைத்தொடர்ந்து, அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சூழலில் இன்று அமைச்சரவை கூடுகிறது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம்பெறுகின்றன. அவை தொடர்பாக இன்று விவாதிக்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதுதவிர, மாணவர்கள், இளைஞர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு திட்டங்களுக்கும் அடுத்த நிதி ஆண்டுக்கான நிதி, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட உள்ளது. மேலும், தனியார் தொழில் திட்டங்களுக்கான ஒப்புதலும் அமைச்சரவையால் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது குறித்தும் இன்று ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, அந்த மசோதாவில் பல்வேறு விளக்கங்களை ஆளுநர் கோரியிருந்தார். அதற்கு 24 மணி நேரத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், தற்போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.