கேரளாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர், உலகின் மிகப்பெரிய ஜிபிஎஸ் வரைபடத்தை வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்
பல்வேறு கின்னஸ் சாதனைகள் குறித்த வீடியோக்களை உலக கின்னஸ் சாதனையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போதைய பதிவில் மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் உலகின் மிகப்பெரிய ஜிபிஎஸ் வரைபடத்தை உருவாக்குவதற்காக சக்கர நாற்காலியில் துபாய் வீதிகளில் உலா வரும் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் மாற்றுத்திறனாளி இளைஞரின் சக்கர நாற்காலி பயணம் துபாயின் முக்கிய இடமான புர்ஜ் கலீஃபா பகுதி மற்றும் துபாய் மால் வழியாகச் செல்லும் விதமாக அமைக்கப்பட்டது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் இந்த ஜிபிஎஸ் வரைபடம் சக்கர நாற்காலியின் வடிவம் கொண்ட லோகோ போன்றே அவர் வரைந்துள்ளார்.
தனிநபராக மிகப்பெரிய ஜிபிஎஸ் வரைபடம் வரைதலில் இவர் சாதனை புரிந்துள்ளார். கிட்டத்தட்ட 8.71 கிமீ தூரத்தை இவர் கடந்து இந்த வரைபடத்தை வரைந்துள்ளார். இந்த கின்னஸ் சாதனையை படைத்த இளைஞரின் பெயர் சுஜித் வர்கீஸ். இவர் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர். தற்போது துபாயில் வசித்து வருகிறார். 2013 சுஜீத் ஒரு விபத்தில் தனது கால்களை இழந்துள்ளார். இந்த சாதனை குறித்து சுஜித் தனது இண்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்திருப்பதாவது: இந்த சாதனையை அடைய சக்கர நாற்காலியை தள்ளும் போது உடல் வலியால் மிகவும் அவதியுற்றேன். 2013 இல் ஒரு வாகன விபத்துக்குப் பிறகு முடங்கிப்போனேன். மேலும் உலகத்தை பயணம் செய்யும் தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவும், கலையின் மீதான ஆர்வத்தைப் பயன்படுத்துவதற்காக ஜிபிஎஸ் வரைபடம் வரைய தொடங்கினேன் “ அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கமளிப்பதற்கும், வலிமையை கொடுப்பதற்கும் இந்த சாதனையை முயற்சித்தேன்” என அவர் தெரிவித்தார்.