கோவையில் மனைவி மற்றும் குழந்தை பிரசவத்தில் பலியானதால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சார்ந்தவர் ராஜ்குமார் இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். திருப்பூர் நிறுவனத்தில் பணியாற்றும்போது ராஜ்குமார் அந்தோணியம்மாள் என்பவரை காதலித்தார். பின்னிருவரும் திருமணம் செய்து தனி வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்தோணியம்மாளுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது . இதனைத் தொடர்ந்து அவரை கோவை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார் ராஜ்குமார்.
துரதிர்ஷ்டவசமாக பிரசவத்தில் அந்தோணியம்மாள் மற்றும் அவரது குழந்தை இறந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் மிகவும் மனமுடைந்து போயுள்ளார். அவர்களது இறுதிச் சடங்கு முடிந்த பின்பும் அவர்களின் ஞாபகமாகவே மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்திற்குப் பிறகு மிகுந்த மன உளைச்சலில் இருந்த ராஜ்குமார் நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை வெகு நேரமாகியும் அவரது அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார் ராஜ்குமார். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.