உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்று இந்தியா வீராங்கனை நீது காங்கஸ் சாதனை படைத்துள்ளார்.
உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய வீராங்கனைகள் 4 பேர் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றனர். அதன்படி சனிக்கிழமை நடைபெற்ற இதன் அரையிறுதி போட்டி ஒன்றில் 48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நீது காங்கஸ், கஜகஸ்தான் வீராங்கனை அலுவா பல்கிபெளோவாவை எதிர்த்து விளையாடினார். அதன்படி போட்டியின் முடிவில், 5-2 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்ற நீது காங்கஸ், இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதையடுத்து இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் நீது காங்கஸ் மங்கோலிய வீராங்கனை லுட்சிஹன்அட்லெட்செட்கை எதிர்கொண்டார். போட்டி துவங்கியது முதலே ஆதிக்கம் செலுத்தி நீது காங்கஸ், இறுதியில் 5-0 என்ற புள்ளிகள் பெற்று மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். தங்கம் வென்ற இந்திய வீராங்கனை நீது காங்கஸ்-க்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.