சென்னையை அடுத்த மறைமலைநகர், காட்டாங்குளத்தூர், சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர். இவா்கள் பணியை முடித்து விட்டு வீடு திரும்பும் போது மறைமலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மர்ம நபர்கள் தனியாக வரும் நபர்களையும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ரயிலுக்காக உட்கார்ந்து கொண்டிருக்கும் பயணிகளையும், கத்தியை காட்டி மிரட்டி செயின் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து வருகின்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் போலீசில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என குற்றம்சாட்டுகின்றனர். இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் சையத் கௌஷிக் (21). இவர் பல்லாவரம் பகுதியில் இயங்கி வரும் கல்லூரியில் படித்து வரும் நிலையில், வழக்கம் போல் கல்லூரி முடித்துவிட்டு இரவு வீட்டுக்குச் செல்லும் போது மறைமலை நகர் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது சிறுநீர் கழிப்பதற்காக ரயில் நிலையம் அருகே உள்ள பகுதிக்கு சென்ற போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை கேட்டுள்ளார். அதற்கு தர மறுத்த சையத் கௌஷிக்கை அங்கு வந்த இளைஞர்கள் வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டிவிட்டு செல்போனை பிடுங்கி விட்டு தப்பித்து சென்று விட்டனர். இது குறித்து சையத் கௌஷிக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.