தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.