தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
சித்திரை மாத முதல் நாளை உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
மேலும், ஏப்ரல் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 21ஆம் தேதி 500 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை மற்றும் மதுரைக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. விடுமுறைக் காலங்களில் மக்கள் பேருந்து நிலையங்களில் வாகனங்களுக்கு அலைமோதுவதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.