லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படக்குழு சென்னை திரும்பி உள்ளது.. மே மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.. மேலும் இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..
இந்நிலையில் லியோ படத்தில், பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோஜு ஜார்ஜ் ஏற்கனவே தமிழில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ஜகமே தந்திரம்’ மற்றும் ‘பஃபூன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்…
இதனிடையே லியோ படத்தில் தனுஷ் மட்டுமின்றி, சூர்யா (ரோலக்ஸ்) மற்றும் கமல்ஹாசன் (விக்ரம்) ஆகியோர் கேமியோவாக நடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஃபஹத் பாசில் (ஏஜென்ட் அமர்) மற்றும் கார்த்தி (டில்லி) ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது… லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்க படக்குழு ஹைதராபாத் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
லியோ படத்தில் கேங்ஸ்டர் வேடத்தில் விஜய் நடிக்கிறார், த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜுன் , மிஷ்கின், மன்சூர் அலி கான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். லியோ தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது. LCU எனப்படும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு அங்கமாக லியோ உருவாகி வருவதாக கூறப்பட்ட நிலையில், லியோ ஒரு தனிப் படமாக இருக்கும் என்று லோகேஷ் சமீபத்தில் தெளிவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது..