கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக அன்பரசன் என்பவரை வேட்பாளராக அறிவித்து இருந்தது. அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டு இருந்த நிலையில், இன்று அதிமுக தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளது. பாஜக மேலிட தலைவர்கள் தொலைபேசி மூலமாக விடுத்த கோரிக்கையை ஏற்று வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர்களும் வாபஸ் பெற்ற நிலையில், அதிமுகவும் வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என்று அமித் ஷா கூறினாலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். இது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் அவரது கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால், தற்போது பாஜகவுடன் வைத்திருக்கும் கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பதற்காகவே, வாபஸ் பெற்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறப்படுகிறது.