திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த ஆத்தூர் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவருடைய கரும்பு தோட்டத்தில் இரண்டு காட்டு யானைகள் புகுந்தன. யானையை விரட்டுவதற்காக வனத்துறையினர் பட்டாசு வெடித்த போது, கரும்பு தோட்டம் தீயில் எரிந்தது. வனத்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதால் கரும்பு தோட்டம் தீயில் கருகியதாக, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் விவசாயி புகார் மனு அளித்துள்ளார். மேலும், தீயில் கருகிய ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான கரும்புகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வருவாய் துறையினர் மற்றும் விவசாயத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறையின் அலட்சிய போக்கினால் யானைகள் காட்டு பகுதியில் இருந்து மக்கள் வாழும் பகுதிக்கு வருவதாகவும், இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், நான்கு நாட்களாக பொதுமக்களை பயமுறுத்தி வரும் யானையை விரட்டுவதற்கு, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.