பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள சென்னை அணியை பாராட்டி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார் .
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கெனவே குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் சென்னை அணி களம் கண்டது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ருதுராஜ் – கான்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் விளாசியது. ருதுராஜ் 79 ரன்கள், கான்வே 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி வரை போராடிய டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் 86 ரன்கள் அடித்தார். சென்னை அணி தரப்பில் தீபக் சஹர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 12வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்னை அணி தகுதி பெற்று அசத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதைத் தொடர்ந்து, முன்னாள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் வீரரான ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில், தல தோனியை பாராட்டி தமிழில் பதிவிட்டுள்ளார். அதில் ‘வழியில் கண்ட மிருகங்களை தந்திரமாய் இழுத்து செல்லும் ஓநாய் கூட்டத்திற்கு வேட்டையாடி, வென்று, நிற்கும் சென்னையின் வேட்கை தெரிவதில்லை. எல்லா தகுதியும் இருக்குறவன் தலைவன் இல்ல.சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மொத்ததயும் ஐபில் கப் அடிக்க தகுதியானவங்களா மாத்துன ‘தல தோனிதான் தலைவன்’ என பெருமிதமாக கூறியுள்ளார்.