நம்மில் பலருக்கும் கொண்டை கடலையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியும். ஏனென்றால், எடையை குறைக்கவும், உடல் எடையை அதிகரிக்கவும் நம்மில் பலர் ஊறவைத்த அல்லது முளைக்கட்டிய சுண்டலை காலையில் சாப்பிட்டு வருவோம். கொண்டைக் கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. வாத நோய், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக் கடலையை தவிர்ப்பது நல்லது. இவ்வளவு நன்மைகளை கொண்ட கொண்டைக்கடலையை வைத்து கொண்டைக்கடலை தோசை செய்வது எப்படி என இந்த தொகுப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள் :
கொண்டக்கடலை – 1 கப் (250 மி.லி)
பச்சரிசி – 1/2 கப்
வெந்தயம் – 1 ஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
உப்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 /2 ஸ்பூன்
நெய் – 3 ஸ்பூன்
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் கொண்டைக் கடலையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* மற்றொரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கொண்டைக்கடலை, பச்சரிசி + வெந்தயம், நறுக்கிய இஞ்சி, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து பின்பு 12 மணிநேரம் புளிக்கவிட வேண்டும்.
* பிறகு மாவை கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை கரைத்து கொள்ளவும்.
* பின்பு உப்பு மற்றும் சீரகம் சேர்த்து கலந்துவிட வேண்டும். பின்னர், தோசைக்கல்லை சூடு செய்து அரைத்த மாவில் சிறிதளவு எடுத்து தோசையாக ஊற்றவும்.
* சுற்றிலும் நெய் ஊற்றி பின்பு திருப்பி விட்டு வேகவிட சுவையான கொண்டைக்கடலை தோசை தயார்.