தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 10, 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடைபெற்றது. 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதியும், 10ஆம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த மார்ச் 30ஆம் தேதி நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வுகள் நடைபெற்று வந்தன. இந்த தேர்வுகள் ஏப்ரல் 28ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, கடந்த 29ஆம் தேதி முதல் 1-9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. 30 நாட்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் வானிலை மிக மோசமாக சுட்டெரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது.
எனவே, மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிகள் திறப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளை திறக்க 2 தேதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும், முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி எந்த தேதியில் பள்ளி திறப்பு என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். கோடை விடுமுறை என்பது மாணவர்களை ஆசுவாசப்படுத்தக்கூடிய காலம். எனவே, தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் ஆங்கில பயிற்சி, நீச்சல், விளையாட்டு போன்ற திறமைகளுக்கான காலமாக இந்த விடுமுறையை பயன்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.