தமிழ்நாட்டில் கோடை விடுமுறை இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், 5ஆம் தேதியிலிருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறை தொடங்கியது. இதையடுத்து, மக்கள் குடும்பங்களுடன் வெளியூர்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்றுள்ளனர். இந்நிலையில், தற்போது பள்ளி ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்கள் மீண்டும் சென்னை மற்றும் பெருநகரங்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த முறை பேருந்து பயன்பாடு அதிகரிக்கும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடியை சமாளிக்க கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவெடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை மற்றும் நெல்லை என 6 மண்டலங்களில் இருந்தும், இது தவிர விரைவு போக்குவரத்து மற்றும் மாநகர போக்குவரத்து என 8 மண்டலங்களில் 20,258 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக முன்பதிவு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “ஜூன் 5ஆம் தேதியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை முடிவடைகிறது. எனவே, மக்கள் தங்கள் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்ப பேருந்துகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இயல்பாகவே இந்த காலத்தில் பேருந்துகள் பயன்பாடு அதிகரிக்கும். எனவே இதனை சமாளிக்க போக்குவரத்துக் கழகம் வசம் இருக்கும் அனைத்து பேருந்துகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதன் மூலம் மக்கள் நெரிசல் குறைக்கப்படும். அதேபோல சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படும்.
பெரும்பாலான பயணிகள் இரவு நேரத்தில் பயணம் செய்வதால் அந்த நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இருப்பதை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம். நெரிசலை சமாளிக்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 20,258 பேருந்துகளை விட கூடுதலாக 500 பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் 5ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியுள்ளனர்.