தெலுங்கில் கடந்த 2017ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன லை என்கிற தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். பின்னர், தமிழில் எண்ட்ரி கொடுத்த அவர், ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய மேகா ஆகாஷுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.
அந்த வகையில், இவர், கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் வந்தா ராஜாவா தான் வருவேன். சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மேகா ஆகாஷ். இதையடுத்து அதர்வாவின் பூமரேங், தனுஷ் – கவுதம் மேனன் கூட்டணியில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா, காளிதாஸ் ஜெயராம் ஜோடியாக ஒரு பக்க கதை போன்ற படங்களில் நடித்தார் மேகா ஆகாஷ்.
தமிழில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற மேகா ஆகாஷுக்கு, அங்கு அடுத்தடுத்து ஹிட் பட வாய்ப்புகள் கிடைத்தன. தெலுங்கில் தற்போது பிசியாக நடித்து வரும் இவர், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது. அதுவும் பிரபல அரசியல்வாதியின் மகனை தான் மேகா ஆகாஷ் கரம்பிடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், இதுகுறித்து மேகா ஆகாஷின் தாயார் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, மேகாவுக்கு கல்யாணம்னு யார் யாரோ ட்விட்டர்ல போடுறாங்க. அது உண்மையில்லை. அதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை. மேகாவுக்கு கல்யாணம் என்றால் நாங்களே முறைப்படி அறிவிப்போம். இது சம்பந்தமா நிறைய பேர் போன் பண்ணி கேக்குறாங்க. அவர் படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் கூட இந்த அளவு போன் கால் வந்ததில்லை என அவர் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.