திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த காஞ்சிபாடி கிராமத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 30). இவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் டில்லிபாபுவை கனகம்மாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.
இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் அமுதா வாதங்களை எடுத்துரைத்தார். இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி சுபத்ராதேவி தீர்ப்பளித்தார். அதன்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டில்லிபாபுவிற்கு 31 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதனைத் தொடர்ந்து டில்லிபாபுவை போலீசார் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.