இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிட்ஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், முடிவு எட்டும் வரை ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள போவதில்லை என மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார்.
பிரிட்ஜ் பூஷன் சரண் சிங் உத்தரபிரதேசத்தில் செல்வாக்கு மிகுந்த பாஜக தலைவர் ஆவர். 6 முறையாக அம்மாநிலத்திலிருந்து மக்களவைக்கு தேர்வாகியுள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் பாஜகவில் சேர்ந்தபின் அக்கட்சி சார்பாக கடந்த இரண்டு மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்வானதும் அடங்கும். இளம் வயதில் மல்யுத்த வீரராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சரண் சிங் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார்.
அவ்வப்போது பாலியல் புகாரில் சிக்கிவந்த பிரிட்ஜ் பூஷன் மீது தேசத்தின் முக்கிய மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் புகார் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. புகார் மீது வழக்கு கூட பதிய டெல்லி போலீஸ் முன்வாராததால் நீதிமன்றம் சென்று வழக்கு வீராங்கனைகள் பதியவைத்தனர். அதன் பிறகும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மாத போராட்டத்திற்கு பிறகும் அரசு நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்ட வீராங்கனைகளை போலீசார் பலவந்தமாக கைது செய்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஜந்தர் மந்தரில் போராடவும் வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கங்கையில் தாங்கள் பெற்ற பதக்கங்களை வீசி எறியச் சென்றனர். அவர்களை தடுத்த விவசாய சங்கத்தினர் தாங்கள் வீராங்கனைகளுக்கு துணை நிற்பதாக கூறி பதக்கங்களை பெற்றுக்கொண்டனர். இவ்வளவு களேபரங்களுக்கு பின் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் வீராங்கனைகளை சந்தித்தார். அப்போது ஜூன் 15-ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததாக வீராங்கனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று ஜூன் 15-ஆம் தேதி வரை போராட்டத்தை ஒத்தி வைப்பதாகவும் வீராங்கனைகள் அறிவித்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக , ஹரியானா மாநிலம் சோனிபட்டில் மகாபஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மல்யுத்த வீரர்கள் , பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சாக்ஷி மாலிக் , இந்தப் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்தால் தான் நாங்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போம் என்று கூறினார். ஒவ்வொரு நாளும் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிறோம் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற மஹாபஞ்சாயத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என ஏற்கனவே மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ள நிலையில், இன்று இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு , பிரிஜ் பூஷன் கைது செய்யப்படுவதை தவிர வேறு வழி இல்லை என்பது உறுதியேற்கப்பட்டது. மேலும் மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளபடி ஜூன் 15 வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஜூன் 16 முதல் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என மஹாபஞ்சாயத் மற்றும் மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.