பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அகலப்பாதைப் பணிகள் முடிவடைந்த போடிநாயக்கனூர் வரை சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்தும் ரயில் சேவை நீட்டிக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்..
ரயில் எண்.20602, மதுரை – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல ரயில் எண்.06702 தேனி – மதுரை தினசரி முன்பதிவு அல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை சென்ட்ரல் – போடிநாயக்கனூர் – சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வாரத்திற்கு 3 நாள்கள்) 16-ந் தேதி சென்னை சென்ட்ரலிலிருந்தும். 18-ந் தேதி போடிநாயக்கனூரிலிருந்தும் சேவையை தொடங்குகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக அடுத்த நாள் காலை 9.35 மணிக்கு போடிநாயக்கனூர் சென்றடையும். சென்னையிலிருந்து இந்த ரயில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும். முன்பதிவு அல்லாத மதுரை – போடிநாயக்கனூர் தினசரி ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது. இந்த ரயில் மதுரையிலிருந்து காலை 8.20-க்கு புறப்பட்டு வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக காலை 10.30 மணிக்கு போடிநாயக்கனூர் சென்றடையும்.