சொத்து தகராறில் உறவினரைக் கொடூரமாக கொலைச் செய்த காட்சி ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமானது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோதாவைச் சேர்ந்தவர் பைரவ் சிங் (32). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ராம் கிருஷ்ணா என்பவருக்கும் நீண்ட காலமாக சொத்து சம்பந்தமாக பகை இருந்து வந்துள்ளது. சொத்து பிரிப்பதில் தகராறு தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், இருவீட்டாரும் பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், இரு குடும்பங்களும் மீண்டும் இதுதொடர்பாக பேசியபோது சண்டை வந்துள்ளது. அப்போது, சர்ச்சைக்குரிய இடத்தில் பைராவ் சிங்கிற்கும் ராம் கிருஷ்ணாவுக்கும் கைகலப்பு ஏற்பட்டு அடிதடியாக மாறியுள்ளது.
இந்த சம்பவங்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமாக ஒளிபரப்பான நிலையில், திடீரென பைரவ் சிங் தன்னிடம் இருந்த கோடரியால் ராம் கிருஷ்ணாவை வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்த சம்வபத்தின் போது ராம் கிருஷ்ணாவின் மருமகள் அஞ்சு தேவி அங்கிருந்த நிலையில், மாமனாரை காப்பாற்ற சென்ற போது அவருக்கும் காயம் ஏற்பட்டது. கொலை செய்த பைரவ் சிங் தப்பியோடிய நிலையில், அங்கிருந்தவர்கள் அஞ்சு தேவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ராம் கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காட்டுப்பகுதிக்குள் தலைமறைவாக இருந்த பைரவ் சிங்கை விரைவாக தேடிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது. தனது தந்தையை கொன்ற பைரவ் சிங்கிற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என உயிரிழந்த ராம் கிருஷ்ணாவின் மகன் கோரிக்கை வைத்துள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.