நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தேத்தாக்குடி தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி துர்கா தேவி (42). இவர்களுக்கு தினேஷ் (20) என்ற மகன் இருக்கிறார். துர்காதேவி கடந்த 18ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து மகளிர் சுய உதவி குழு கடன் தொகையை கட்ட சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை தேத்தாகுடியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள புஷ்பவனம் கடற்கரையில் தலையில் காயத்துடன் துர்காதேவியின் உடல் கிடந்தது.
இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது துர்கா தேவியுடன் புஷ்பவனம் அழகுக்கண்டர்காட்டை சேர்ந்த அருண் (20) என்ற வாலிபர் பேசி வந்தது தெரிந்தது. இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் அருணை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அருண் சேலம் தனியார் மருத்துவ கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருவதும், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இருந்து மளிகை பொருட்கள் வாங்கி வந்து வேதாரண்யம் பகுதியில் வாட்ஸ் அப் மூலம் விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
அருண், மளிகை பொருட்கள் விற்கும்போது கடந்த மே மாதம் துர்காதேவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அவ்வப்போது அருண், துர்காதேவிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். சமீபத்தில் அருண் பிறந்த நாளன்று, இருவரும் தனிமையில் இருந்தபின் துர்கா தேவிக்கு ஒன்றரை பவுன் நகையை அருண் பரிசாக தந்திருக்கிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று புஷ்பவனம் கடற்கரையில் துர்காதேவியுடன், அருண் தனிமையில் உல்லாசமாக இருந்திருக்கிறார். அப்போது துர்காதேவி, அருணிடம் ரூ.1 லட்சம் பணம் கேட்டுள்ளார். அதற்கு என்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது துர்காதேவி, பணம் தராவிட்டால் தகாத உறவை வெளியே சொல்லி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண், துர்காதேவி மீது 3 முறை காரை ஏற்றியுள்ளார். இதில் துர்காதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர்.