அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்ததாக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுடன் விளையாடும் போட்டிகள் ஜூலை 12இல் தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. இதையடுத்து ஆகஸ்ட் 18 இல் அயர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் தொடங்குகிறது. ஆகஸ்ட் 18இல் முதல் டி-20 போட்டியும், ஆகஸ்ட் 20இல் 2-வது டி-20 போட்டியும், ஆகஸ்ட் 23 இல் 3-வது டி-20 போட்டியும் நடைபெறுகிறது. 3 டி-20 போட்டிகளும் பிற்பகல் 3 மணிக்கு மலாஹிட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்திய அணி கடந்த 2022 இல் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது, ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி 2-0 என தொடரை வென்றது. தற்போது அயர்லாந்துக்கு இரண்டாவது முறை இந்தியா சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவின் பிஸியான பயணத்திட்டத்திலும் கூட அயர்லாந்தை தொடர்ந்து சேர்த்துக் கொண்டதற்கும், போட்டிகள் முடிந்தவரை ரசிகர்களுக்கு ஏற்றவாறு அட்டவணையை உறுதி செய்ய எங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் பிசிசிஐக்கு மனமார்ந்த நன்றிகள். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறேன் என்று அயர்லாந்து தொடர் குறித்து அயர்லாந்து கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான வாரன் டியூட்ரோம் கூறியுள்ளார்.