மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக இனக்கலவரமும் போராட்டமும் தொடர்ந்து வருகிறது. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எதுவும் பயன் தந்ததாக தெரியவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது.
மாநில காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராணுவம் அனுப்பப்பட்டது. ஆனால், வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட குகி சமூகத்திற்கு ஆதரவாக ராணுவம் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், விஷ்ணுபுரம் மாவட்டம் கொய்ஜுமந்தாபி கிராமத்தில் இன்று அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கிராமவாசிகள் இருவர் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் கடும் துப்பாக்கிச்சூடு தொடர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர்.
இந்த சூழலில்தான், மெய்டீஸ் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி மே 3ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வெடித்த வன்முறைதான் தற்போது வரை நீடிக்கும் கலவரத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இரண்டு மாதங்களாக தொடர்ந்து வரும் கலவரத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த ஊரிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.