பாலிவுட்டில் 2005ஆம் ஆண்டு சந்த் சா ரோஷன் செக்ரா படத்தின் திரையுலகில் அறிமுகமானவர் தமன்னா. இதையடுத்து, 2006ஆம் ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். முதல் படத்திலேயே நெகட்டிவ் கேரக்டரில் நடித்ததால் ஓரளவு கவனம் பெற்றார். பின்னர் தமிழில் வியாபாரி, கல்லூரி ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் கல்லூரி படம் ஹிட்டாகி நல்ல நடிகை என்ற பெயரை தமன்னாவுக்கு பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், சுறா, பையா, சிறுத்தை, தில்லாலங்கடி, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
ஆனால், திடீரென தமன்னாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் குறையவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு தனது திறமை மற்றும் அழகு ஆகியவைகளை வைத்து பட வாய்ப்புகளை பெற்றார். ஜீ கர்தா என்ற வெப் சீரிஸில் நடித்தார். அதில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. ஹாலிவுட்டில் நடிப்பதற்காகத்தான் அவர் இவ்வாறு கவர்ச்சி காட்டுகிறார் என பலர் பேச அதை தமன்னா மறுத்து, கதைக்கு தேவைப்பட்டதால் நடித்தேன் என விளக்கம் அளித்தார். அதேபோல் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் 2விலும் கவர்ச்சியாகவே நடித்திருந்தார்.
இந்நிலையில், லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்ததற்காக தமன்னா பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஒரு படத்துக்கு மூன்று முதல் நான்கு கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்ற தமன்னா லஸ்ட் ஸ்டோரிஸ் 2-வில் கவர்ச்சி அதிகம் இருந்ததன் காரணமாக ரூ.6 கோடி சம்பளமாக பெற்றார் என கூறப்படுகிறது.