தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வுக்கு இடையில் தற்போது மீன்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன்பிடிப்பு அமலுக்கு உள்ளது. தமிழ்நாட்டில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், அடுத்த சீசனுக்கு மீன்கள் கடலில் இருக்கவும் மீன்பிடி தடைக்கலாம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக இந்த தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள். இந்த காலத்திற்கு பின் மீண்டும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வார்கள்.
அது போன்ற சமயங்களில் மீன் வாங்க பலரும் ஆசைப்படுவதால் மீன் விலையும் அதிகமாக இருக்கும். மீன்பிடி தடைக்காலத்திற்கு பின் வரிசையாக பலரும் மீன் வாங்குவதற்காக முந்தி அடிப்பதால் மீன் விலை அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை வழக்கத்தை விட அதிக அளவில் மீன் விலை உயர்ந்துள்ளது. காரணம் மீன்பிடி தடை காலத்திற்கு பிறகும் பெரிதாக மீன்வரத்து இல்லை. கடலுக்கு செல்லும் மீனவர்கள் பெரிதாக மீன்பிடிக்காமல் குறைந்த அளவு மீன்களுடன் திரும்பி வருகின்றனர்.
மக்கள் பலரும் மீன்களை வாங்குவதற்காக முட்டிமோதிக்கொண்டு இருக்கும் நிலையில், மீன்வரத்து பெரிதாக இல்லை. நேற்று கடலுக்கு சென்ற மீனவர்கள் பலரும் குறைந்த அளவு மீன்களோடு வந்ததால் ஞாயிற்றுக்கிழமையான் நேற்று மீன் விலை மிக அதிகமாக இருந்தது. ஒரு கிலோ வஞ்சிரம் மீன் 1400 ரூபாய் வரை கூட பல இடங்களில் விற்கப்பட்டது. சாலை, மத்தி, சங்கரா மீன்களின் விலையும் மிக அதிகமாக இருந்தது. சாதாரணமாக விற்கும் மீன்களின் விலையை விட நேற்றும், இன்று காலையும் மீன்களின் விலை 100 – 200 ரூபாய் அதிகம் இருந்தது. இந்த திடீர் விலை ஏற்றம் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.