இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி சுற்றுலா பயணிகளுக்காக பிரத்யேக `பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்’ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 3 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 8 ஸ்லீப்பர் பெட்டிகள், ஒரு பேன்ட்ரி கார், 2 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன.
எர்ணாகுளத்தில் உள்ள ஐஆர்சிடிசி பிராந்திய அலுவலகம் சார்பில் ஆடி மாதம் `புண்ணிய தீர்த்த யாத்திரை (SZBG06)’ என்ற பெயரில் சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உஜ்ஜைன், மஹாகாலேஷ்வர், ஓம்காரேஸ்வர், ஹரிதுவார், ரிஷிகேஷ், காசி, சாரநாத், அயோத்தியா, ப்ரயாக்ராஜ் ஆகிய இடங்களுக்குச் செல்லும் இச்சுற்றுலா பயணம், மொத்தம் 12 பகல், 11இரவு நடைபெறும். ஜூலை 20-ம் தேதி இச்சுற்றுலா தொடங்குகிறது.
ஒரு நபருக்கு ஸ்லீப்பர் வகுப்பில் செல்ல ரூ.24,340-ம், மூன்றாம் வகுப்பு ஏசிக்கு ரூ.36,340-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ரயில் பயணம், தங்கும் இடம், உள்ளூர் போக்குவரத்து, தென்னிந்திய உணவு, சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதி ஆகியவை இதில் அடங்கும்.
இந்த ரயில் கொச்சுவேலி, பாலக்காடு, போத்தனூர் (கோவை), ஈரோடு, சேலம் ஆகிய வழித்தடத்தில் செல்லும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.