தக்காளியைப் பாதுகாக்க ஜிம் பாய்ஸை நிறுத்தியவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி லங்கா பகுதியைச் சேர்ந்த அஜய் பவுஜி என்பவர், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர். இவர் காய்கறி கடைக்காரர். தனது கடையில் தக்காளியைப் பாதுகாக்க ஜிம்பாய்ஸை நிறுத்தி வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தன்னுடைய கடையில், `முதலில் பணம், பிறகு தக்காளி.. தயவு செய்து தக்காளியைத் தொடாதீர்கள்.. 9 வருட பணவீக்கம்’ போன்ற வாசகங்களை போஸ்டராகத் தொங்கவிட்டு தக்காளி விலை உயர்வுக்கு எதிரான தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை அவதூறு வழக்காகப் பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள், 153A, 295, 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரையும் அவரது மகனையும் தற்போது கைது செய்துள்ளனர். ஆனால், கடைக்காரர் அஜய் பவுஜி தலைமறைவாக உள்ளார் என்று கூறப்படுகிறது. ஜிம் பாய்ஸை தக்காளிக்குப் பாதுகாப்பாக நிறுத்தியது குறித்து அஜய் பவுஜி கூறுகையில், ”என்னுடைய கடையில் காய்கறிகளைக் குறிப்பாகத் தக்காளி வாங்க வருபவர்கள் பேரம் பேசுகிறார்கள்.
அவர்கள் ஆத்திரம் கொள்ளாமல் இருக்கக் கடைக்கு முன்னே காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை 2 ஜிம்பாய்ஸ்களை நிறுத்தி இருக்கிறேன். இதனால் மக்கள் இப்போது அதிகம் பேரம் பேசுவதில்லை” என்று தெரிவித்திருந்தார். விலைவாசி உயர்வு குறித்து பாஜகவை தாக்கும் விதமாக அமைந்துள்ளதாகக் காரணம் காட்டி, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம். தந்தையும் மகனும் இதுகுறித்து ஏதும் அறியாதவர்கள் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மற்றொருபுறம் அரசியல் காரணங்களுக்காக அஜய் பவுஜி இப்படிச் செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.