திருவள்ளூர் மாவட்டம் ஆவடியைச் சேர்ந்தவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி (52). இவர், திருவள்ளூர் பாஜக மேற்கு மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். இவர், கடந்த 2008ஆம் ஆண்டு நளினி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர், கடந்த 2017ஆம் ஆண்டு தேவிகா (36) என்பவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இதனை அறிந்த முதல் மனைவி நளினி, மனவேதனையில் 2018ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், இரண்டாவது மனைவியான தேவிகாவை விட்டு விலக மூர்த்தி முடிவு செய்து, பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த ஜென்சி என்பவரை கடந்த ஜூலை மாதம் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த இரண்டாவது மனைவி தேவிகா, ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் எஸ்.கே.எஸ்.மூர்த்தி மீது புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது திருமணத்தை மறைத்து மூன்றாவதாக திருமணம் செய்ததாக மூர்த்தி கைது செய்யப்பட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.