தற்போது தலைநகர் சென்னையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும், விட்டு,விட்டு மழை பொழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.தலைநகர் சென்னையில், நேற்று பிற்பகல் ஆரம்பமான கனமழை, இரவு முழுவதும் பொழிந்தது. இதனால், குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால், மக்கள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர்.
ஆனாலும், இன்று காலை முதல், மறுபடியும் வெயில் சற்று அதிகரித்து காணப்பட்ட நிலையில், பிற்பகலுக்கு பின்னர், சென்னை புறநகர் பகுதிகளில், மழை பொழிய தொடங்கியது.அதாவது, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான, திருவொற்றியூர், எண்ணூர், மணலி போன்ற பகுதிகளில், விட்டு, விட்டு கன மழை பொழிந்து வருகிறது.
மேற்கு திசை காற்று மற்றும் தென்மேற்கு திசை காற்றும் சந்தித்ததன் காரணமாகத்தான், இந்த திடீர் கனமழை பொழிந்து வருகிறது என்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
அதன்படி, இன்று, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற 5 மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில், கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது.