கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு குறைந்த அளவு நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணையில் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. விரைந்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் (Mettur Dam) நீர் இருப்பு 20 டிஎம்சி மட்டுமே உள்ளது. வருடந்தோறும் ஜூன் – செப்டம்பர் வரை மேட்டூர் அணைக்கு 125 டிஎம்சி தண்ணீர், கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட வேண்டும். ஆனால், இந்தாண்டு கடந்த 64 நாட்களில் வெறும் 47 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. இன்னும் 78 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும் நிலையில், மேட்டூர் அணையில் இருந்து 5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறந்து விட முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
மீதமுள்ள 15 டிஎம்சி தண்ணீர், 28 மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருப்பு வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 5 முதல் 10 நாட்களுக்குள் முழுமையாக நிறுத்தப்படும். காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அன்றைய தினம் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது.
இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரவேண்டிய நீர், இதுவரை திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கர்நாடகா மாநிலத்தில் இருந்து தண்ணீர் பெற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 552 கன அடியாகவும், நீர் மட்டம் 53.38 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 20 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது.