டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச்செயல் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிதம்பரத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி 2016-ல் மக்கள் அதிகாரம் அமைப்பு போராட்டம் நடத்தியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிதம்பரம் 1வது நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக முருகானந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகளை அகற்ற நடத்தப்படும் அமைதியான போராட்டங்களை குற்றச்செயலாக கருத முடியாது என்று தெரிவித்த உயர்நீதிமன்றம் மக்கள் அதிகாரம் அமைப்பின் மீதான வழக்கை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் “ அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களின் போது டாஸ்மாக் கடைகளை மூடுவதாக வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால் டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு பதில், வேறு இடத்திற்கு மாற்றப்படுவதால் முக்கியப்பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது. அமைதியான முறையில் போராடுவோர் மீது குற்றவழக்கு பதிவு செய்தால் அது ஜனநாயக உரிமைக்கு எதிரானது.
போராட்டங்கள் அமைதியாகவும் வன்முறையற்றதாகவும் தொடர்ந்தால், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த முடியும். அமைதியான போராட்டங்கள் மூலம் பொதுமக்கள் தங்கள் உரிமைகளை அரசிடம் இருந்து கேட்டுப்பெற முடியும்.” என்று நீதிபதி தெரிவித்தார்.
Read More : TNPSC குரூப்-1 தேர்வு: திமுக குறித்த கேள்வியால் வெடித்தது சர்ச்சை..!! என்ன விஷயம் தெரியுமா..?