விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜ்கோட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீ பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விபத்தில் உயிரிழந்தார். தற்போது, அவரது இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் ராஜ்கோட்டில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காலை 11:30 மணிக்கு, அவரது உடல் அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் இருந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விஜய் ரூபானியின் உடல் உள்ள சவப் பெட்டியின் மீது மூவர்ணக்கொடி போற்றப்பட்டு, காவலர்கள் சுமந்து வந்தனர். உடலுக்கு முதல்வர் பூபேந்திர படேல் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் ரிஷிகேஷ் படேல், ஹர்ஷ் சங்கவி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார். விஜய் ரூபானியின் மனைவியும் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, விஜய் ரூபானியின் உடல் அங்கிருந்து ராஜ்கோட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. மாலை 5 மணிக்கு, அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது. சடங்கு நடை பெறும் வாகனத்தில் சுமார் 2,000 கிலோ பூக்கள் வைத்து அலங்கரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களில் பல அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்ததால், டிஎன்ஏ சோதனைகள் மூலம் அடையாளம் காணும் பணி நடைபெறத் தொடங்கியது. இதில், இதுவரை 92 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 47 உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இதில், விஜய் ரூபானியின் உடலும் அடக்கம் என்று அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் கூடுதல் கண்காணிப்பாளர் டாக்டர் ரஜ்னீஷ் படேல் தெரிவித்துள்ளார்.
Read more: பாமகவிற்கு துரோகம் செய்தால் அதுதான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும்.. அன்புமணி உருக்கம்..