இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, அடுத்த 3 மாதங்களில் மேலும் 25 அடிப்படை புள்ளிகள் (basis points) வட்டி விகிதத்தில் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முந்தைய மூன்று முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதையடுத்து, தற்போது ரெப்போ விகிதம் 5.50% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக, வங்கிகள் தங்களது கடன் வட்டி விகிதங்களிலும் மாற்றங்களை செய்யத் தொடங்கியுள்ளன.
பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை, தங்களது ரெப்போ இணைப்பு வட்டி விகிதம் (RLLR) ஐ முறையே 8.65% இருந்து 8.15%, மற்றும் 8.85% இருந்து 8.35% ஆக குறைத்துள்ளன. இந்த மாற்றம் வீடு வாங்க விரும்புவோருக்கும், சிறு வணிக கடனாளிகளுக்கும் நேரடி நன்மையை ஏற்படுத்தும்.
இந்த வட்டி விகிதக் குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினால், அவர்களின் மாதாந்திர EMI குறையும் என நிபுணர்கள் மதிப்பீடு செய்கின்றனர். ஆனால், பல வங்கிகள் இதுவரை வாடிக்கையாளர்களிடம் இந்த மாற்றங்களைப்பற்றி தெரிவிக்கவில்லை. EMI குறைக்க வேண்டுமா அல்லது கடன் செலுத்தும் காலத்தை குறைக்க வேண்டுமா என்பதை வாடிக்கையாளர்களிடம் கேட்க வேண்டிய அவசியம் இருப்பினும், பல வங்கிகள் இதை செய்யவில்லை என புகார்கள் உள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைத்தாலும், அனைத்து வங்கிகளும் அதை உடனடியாக அமல்படுத்துவதில்லை. எனவே, EMI குறைப்பு அல்லது காலக்கெடு மாற்றம் போன்றவற்றைச் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்களது வங்கி கிளைகளில் நேரில் சென்று, எழுத்து மூலம் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.
கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட யு.சி.ஓ வங்கி, MCLR விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது அந்த விகிதம் 8.15% முதல் 9.00% வரை உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகள் தொடரும் பட்சத்தில், பொதுமக்கள் மற்றும் வணிகக்கடனாளிகள் நன்மை பெற வாய்ப்பிருக்கிறது. ஆனால், வங்கிகள் இந்த மாற்றங்களை சரியாகப் பிரதிபலிக்க வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.