உத்தரபிரதேச அரசு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் கொடூரமாக தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சௌக் கோட்வாலி பகுதியில் அரசு குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 13-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வசித்து வருகிறார்கள். அந்த காப்பகத்தில் பூனம் கங்வார் என்ற பெண் விடுதி காப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை தடியால் அடித்து கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23 வினாடிகள், 5 வினாடிகள் மற்றும் 14 வினாடிகள் கொண்ட 3 வீடியோவில், பூனம் கங்வார் குழந்தைகளைக் குச்சியால் அடிப்பது, காதுகளை இழுப்பது போன்ற கொடூர காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. குழந்தைகளை அடித்ததை பாஜகவின் மாவட்ட உறுப்பினர் முகேஷ் தீட்சித் கண்டித்து, 2024 டிசம்பர் 31 அன்று அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் மாவட்ட நன்னடத்தை அதிகாரி கௌரவ் மிஸ்ரா விசாரணை நடத்தி, குற்றம் சாட்டப்பட்டவரை இடைநீக்கம் செய்தார்.
தற்போது இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி அபராஜிதா, மேலும் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். “இது பழைய சம்பவமாக இருந்தாலும், வீடியோவில் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை மிகவும் சோகமானது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கண்டிப்பாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அரசாங்க பாதுகாப்பில் வளரும் அப்பாவி குழந்தைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. அதே சமயம் அரசு காப்பகங்களில் வளரும் குழந்தைகள் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது. இது தொடர்பான விசாரணைகள் தொடருகின்றன.