ஆஸ்கர், கோல்டன் குளோப் மேடைகளிலேயே கிடைத்த அங்கீகாரம் தேசிய விருது விழாவில் ஒட்டுமொத்தமாக தமிழ் படங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இருப்பதாக ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான காலக்கடத்தில் சென்சார் செய்யப்பட்டு வெளியான படங்களுக்கான 69வது தேசிய விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் சிறப்பு விருதுக்கான பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு அறிவிக்கப்பட்டது. அதேபோல, சிறந்த மாநில மொழிப் பிரிவில், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதுக்கு ‘கடைசி விவசாயி’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்துக்கு 4 தேசிய விருதுகள் குவிந்த நிலையில், புஷ்பா படத்துக்கு 2 தேசிய விருதுகள் குவிந்தன. ஆனால், தமிழில் கடைசி விவசாயி மற்றும் இரவின் நிழல் படத்தில் மாயா சாயா பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு மட்டும் விருது கிடைத்துள்ளது.
பி.லெனின் இயக்கிய சிறந்த கல்வி திரைப்படமாக ‘சிற்பங்களின் சிற்பங்கள்’ திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கருவறை’ என்ற ஆவணப் படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டை பொறுத்தவரை சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை, பின்னணி இசை, சிறந்த திரைப்படம் என 5 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றிருந்தது. ‘சிவரஞ்சனியும், சில பெண்களும்’ திரைப்படம் 3 பிரிவுகளில் விருதை வென்றிருந்தது. மண்டேலா 2 பிரிவுகளில் விருது வென்றது. மொத்தம் கடந்த ஆண்டு மட்டும் 10 விருதுகள் கிடைத்திருந்தன.
2021-ல் நல்ல படைப்புகள் தமிழில் வந்தபோதிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தேசிய விருது கிடைத்திருப்பது தமிழ் சினிமாவுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சர்பட்டா பரம்பரை’, சூர்யாவின் ‘ஜெய்பீம்’, மாரிசெல்வராஜின் ‘கர்ணன்’ உள்ளிட்ட நல்ல வரவேற்பை பெற்ற தமிழ் படங்கள் தேசிய விருதுகளை வாங்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு தேசிய விருது பட்டியலில் இடம்பெறாதது ஏமாற்றம் அளித்துள்ளது.