இந்தியாவில் மாத வருமானம், மற்ற வகைகளில் வருமானம் பெறக்கூடியவர்கள் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் – ஜூலை மாதங்களில் இந்த வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக அவகாசம், நேரம் கொடுக்கப்படும். அந்தவகையில், இந்தாண்டு ஜூலை 31ஆம் தேதி வருமான வரி (Income Tax)செலுத்துவோர் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய அவகாசம் கொடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை 31 வரை சுமார் 5.83 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு 6.91 கோடிக்கும் அதிகமான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. கடைசி வாரத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இதனால் அவர்களுக்கு கொஞ்சம் தாமதமாக நேரம் எடுத்து ரீபண்ட் செல்கிறது. அதில் நேற்று முதல்நாள் பலருக்கும் பணம் ரிபண்ட் கொடுப்பதற்கான இன்டிமேஷன் சென்றுள்ளது. மற்றொரு புறம் பலருக்கும் அவர்களின் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கலில் உள்ள பிழைகள் குறித்தும், தவறான தகவல் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இதில், 31 லட்சம் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்துவிட்டு அதை இ வெரிஃபிகேஷன் செய்யாமல் விட்டுள்ளனர். ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பின் அதை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் செய்யவில்லை. இதனால் இவர்களுக்கு இன்னும் பணம் அனுப்பப்படவில்லை. எனவே, இவர்கள் உடனடியாக இ வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். இல்லையென்றால் இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. முறையாக தாக்கல் செய்து இ வெரிஃபிகேஷன் செய்தவர்களுக்கு ஏற்கனவே ரி பண்ட் சென்றுவிட்டது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை வருமான வரித்துறை அதிக அளவு தொகையை கொடுத்துள்ளது. கடைசியாக தாக்கல் செய்த பலருக்கு இந்த வாரம் கொடுக்கப்படும். இதுவரை சுமார் ரூ.72,215 கோடி வரியை வருமான வரித்துறை திருப்பிச் செலுத்தியுள்ளது. தனி நபரை விட நிறுவனங்களுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கிட்டத்தட்ட 35 ஆயிரம் கோடி ரூபாய் தனி நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.