சமீப காலமாக, பலர் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். சிலர் எடையைக் குறைக்க சிரமப்படுகிறார்கள். மற்றவர்கள் இந்தப் பிரச்சினைக்கு எளிதான மற்றும் விரைவான தீர்வைத் தேடுகிறார்கள். அதற்காக கொழுப்பைக் குறைக்கும் மாத்திரைகள், சப்ளிமெண்ட்ஸ், பவுடர்கள் மற்றும் ஊசிகள் ஏற்கனவே சந்தையில் பரவலாகக் கிடைக்கின்றன.
அந்த வகையில் இந்தியாவில் சமீபத்தில் உடல் எடையை குறைக்கும் ஊசிகள் (Weight-loss injections) அறிமுகமாகியுள்ளன. வெகோவி (Wegovy) மற்றும் மவுஞ்சாரோ (Mounjaro) எனும் இந்த மருந்துகள், உலகளவில் பரபரப்பாகப் பேசப்பட்டவையாகும். நோவோ நார்டிஸ்க் மற்றும் எலி லில்லி என்ற நிறுவனங்கள் உருவாக்கிய இந்த மருந்துகள் தற்போது இந்தியாவில் வணிக அனுமதி பெற்றுள்ளன.
இந்த மருந்துகள் இரண்டு வழிகளில் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. மூளையில் உள்ள பசியை கட்டுப்படுத்தும் மையங்களாக செயல்பட்டு பசியை குறைத்து குறைவாக சாப்பிட வைக்கும் மற்றும் இரைப்பையின் காலியாக்கும் வேகத்தை குறைத்து உணவு வயிற்றில் அதிக நேரம் இருக்கும் படி செய்யும். இதனால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டு பசி எடுப்பதில்லை. இந்த ஊசிகள் எடை குறைப்பில் பயனுள்ளதாக இருந்தாலும், பல ஆபத்துகள் மற்றும் பக்க விளைவுகளைக் கொண்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பக்க விளைவுகள்: குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்று வலி அல்லது வயிறு அசௌகரியம், அஜீரணம், பசியின்மை, சோர்வு, தலைசுற்றல், தலைவலி ஆகியவை இந்த மருந்தை எடுத்துக் கொள்பவர்களுக்கு ஏற்படும் லேசான பக்க விளைவுகள் ஆகும்.
விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் செமாக்ளூடைடு மற்றும் டிர்சுபடைடு ஆகியவை தைராய்டு கட்டிகளுக்கு வழிவகுக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்களில் இந்த ஆபத்து உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் தைராய்டு புற்றுநோயின் குடும்ப வரலாறு உள்ளவர்கள் இந்த மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இந்த மருந்துகளின் பயன்பாடு கணைய அலர்ஜியை ஏற்படுத்தலாம். கணையம் தீவிரமாக வீங்குவதன் காரணமாக வயிற்று வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படும். கணைய அலர்ஜியின் அபாயம் அதிகரிக்கும் போது உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். இந்த மருந்துகள் நீரிழப்பு மற்றும் சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஏற்கனவே சிறுநீரக நோய் இருப்பவர்கள் இந்த மருந்தை எடுப்பதை தவிர்க்க வேண்டும். இந்த ஊசிகள் எடுத்துக் கொண்ட பின்னர் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படலாம்.
இதன் காரணமாக உடம்புகளில் அரிப்பு, தடிப்புகள், சுவாசிப்பதில் சிரமம், முகம், நாக்கு, தொண்டை ஆகியவற்றில் வீக்கம், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இரைப்பையை காலியாக்கும் வேகத்தை குறைப்பதால் ஏற்கனவே இரைப்பை செயலிழப்பு உள்ளவர்களுக்கு நிலைமை மோசமடையலாம். உணவு குறைவாக எடுத்துக் கொள்ளும் காரணத்தினால் ஊட்டச்சத்துக்களை பெற முடியாமல் போகலாம். இது நீண்டகால ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். சில ஆய்வுகளில் இந்த மருந்துகளை பயன்படுத்துபவர்களுக்கு மனச்சோர்வு, மனநல பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஊசி நிறுத்திய பிறகு எடைக் கூடும்? ஊசிகளை நிறுத்தியவுடன் மீண்டும் எடை அதிகரிக்கும் நிலை உருவாகலாம் என்று மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதனால், வாழ்நாள் முழுவதும் மருந்துகளை தொடர வேண்டிய கட்டாய சூழ்நிலையை நோக்கி சிலர் தள்ளப்படுகிறார்கள். இது, உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாது, நிதிச் சுமைக்கும் காரணமாக அமையும். மேலும், இந்த மருந்துகள் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது.