swiggy, zomato போன்ற நிறுவனங்கள் கமிஷன் தொகையை குறைக்காவிட்டால் உணவு வழங்க மாட்டோம் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
நவீன வாழ்க்கை முறைமையில், வீடிலிருந்தபடியே உணவு வாங்கும் வசதியால் ஆன்லைன் டெலிவரி செயலிகள் மக்களிடையே பிரபலமடைந்துள்ளன. ஆனால் சமீப காலமாக ஆன்லைன் தளங்களில் உணவுகளின் ரேட் அதிகரித்து வருகிறது. மேலும், டெலிவரி சார்ஜ், பிளாட்பார்ம் பீஸ், பேக்கிங் பீஸ் என ஏகப்பட்ட கூடுதல் கட்டணங்களையும் போட ஆரம்பித்தன.
அதே நேரம் உணவக உரிமையாளர்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். ஆன்லைனில் ஸ்விக்கி,சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒவ்வொரு ஹோட்டல்களிலும் ஒவ்வொரு மாடலில் கமிஷன் பெறுகிறார்களாம்.. ஹோட்டல்களில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும்போது அந்தப் பணம் ஒரு வாரம் கழித்தே உரிமையாளர்களுக்குச் செல்கிறதாம். அப்போது அந்த டேட்டாவை எடுத்துப் பார்த்தால் ஏகப்பட்ட சார்ஜ்கள் மற்றும் கமிஷன்களை போடுகிறார்களாம்.
இதனால் முதலில் நாமக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், ஜூலை 1 முதல் சுவிக்கி, சொமேட்டோ மூலமாக உணவுகள் வழங்கப்படமாட்டாது என்று அறிவித்தது. இது தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கமும், “கமிஷன் தொகை குறைக்காத பட்சத்தில் நாளைய தினம் முதல் ஸ்விக்கி, சொமேட்டோவுக்கு உணவு வழங்க மாட்டோம்” எனக் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவன பிரதிநிதிகள் மற்றும் ஹோட்டல் சங்கத்தினருக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், உறுதியான முடிவு எட்டப்படவில்லை. இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதில் சரியான தீர்வு எட்டப்படாத பட்சத்தில், சென்னையிலும் உணவுகள் டெலிவரி செய்யப்படாது என்ற எச்சரிக்கையை தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் ரவி வெளியிட்டுள்ளார்.
இந்த முடிவால், ஆன்லைன் டெலிவரியில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும் என்ற சமூக கவலையும் எழுந்துள்ளது.
Read more: இந்த 8 இடத்தில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்ய திட்டம்…! சென்னை மாநகராட்சி அனுமதி…!