நடிகர் விஷால் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மெர்சி ஹோம் முதியோர் கருணை இல்லத்தில் முதியோர்களுக்கு உணவு வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடுவது கடவுளிடம் நேரில் வாழ்த்து பெறுகிறது போல் உள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு குறித்து மக்கள்தான் கூற வேண்டும். அவர் மீண்டும் நடிக்க வருவது குறித்து எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்றார். இதையடுத்து சூப்பர் ஸ்டார் டைட்டில் சர்ச்சை குறித்து பேசிய அவர், சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிகாந்துக்கு 45 வருடத்துக்கு முன் கொடுக்கப்பட்ட பட்டம். இந்த வயதிலும் அவர் நடிப்பது எங்களைப் போன்ற நடிகர்களுக்கு ஊக்கமளிக்கிறது. அவர் ஓய்வெடுக்கலாம். ஆனால், மக்களை மகிழ்ச்சிபடுத்த வேண்டும் என நினைப்பதுதான் சூப்பர் ஸ்டாருக்கான அர்த்தம் என தெரிவித்தார்.
அதேபோல் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்த கேள்விக்கு, முதலில் விஜய் அரசியலுக்கு வரட்டும். அவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவருக்கு ஆரம்பகாலத்தில் கிடைத்த விமர்சனங்களை கடந்து வெற்றி பெற்ற தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும். அவரது ரசிகன் நான் என பெருமையாக சொல்வேன். ஒரு வேளை விஜய்க்கு அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துகள். வாக்காளராக அவர் நல்லது செய்ய வேண்டும் என நினைப்பதாக தெரிவித்தார்.