சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (28), இவர் நகை திருட்டு தொடர்பாக தனிப்படை போலீசாரால் விசாரிக்க அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். போலீசார் கண்மூடித் தனமாக தாக்கியதால் அஜித்குமார் உயிரிழந்ததாகவும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அஜித்குமார் உடலைப் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டதில் அவருடைய உடலில் 18 இடங்களில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அஜித்குமார் லாக் அப் மரணம் மர்ம மரணமாக பதிவு செய்யப்பட்ட நிலையில், கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனிப்படை போலீசார் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில் அஜித்குமார் லாக் அப் மரண வழக்கில் கைதான 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன்படி பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் லாக் அப் மரணம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் திருப்புவனம் வாலிபர் மரணம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி வேண்டியும், தமிழ்நாட்டில் லாக்கப் மரணங்கள் நிகழ்வதை தடுக்க கடுமையான தண்டனைகள் விதிக்க கோரியும் அதிமுக, பாஜக, தவெக போன்ற எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் திமுக அரசின் கூட்டணியில் உள்ள கட்சிகளும் கூட கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து திருப்புவனம் இளைஞர் அஜித் குமாருக்கு நடந்த கொடுமை யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் அஜித் குமார் குடும்பத்தினரிடம் செல்ஃபோன் மூலமாக வருத்தம் தெரிவித்து ஆறுதல் கூறியுள்ளார்.
இந்தநிலையில், இந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக, திமுக நிர்வாகிக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, யூடியூபர் மாரிதாஸ் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, இளைஞர் அஜித்குமார் மரணத்தில் திமுக நிர்வாகி சேங்கை மாறன் பெயர் அடிபடுவதாகவும், அவரை காப்பாற்றவும், தன் கட்சி பெயர் இடம்பெறக்கூடாது என்பதற்காகவும் இவ்வளவு பித்தலாட்ட வேலையை திமுக அரசு பார்க்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.