கென்யாவின் நைரோபி நகரம் உள்பட பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாகத் தொடரும் அரசு எதிர்ப்பு போராட்டங்கள், இப்போது தீவிரமான வன்முறைகளில் முடிந்துள்ளன. ஜூலை 7 ஆம் தேதி அந்த நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்வான “சப சபா” போராட்ட நினைவு நாளில் பெரும்பான்மையிலான இளைஞர்கள் சாலைகளில் குவிந்தனர். ஜனநாயக அரசியல் கோரிக்கைகளுடன் கூடிய இந்த மக்கள் எழுச்சியை கலைப்பதற்காக, கென்யா காவல் துறை தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகள் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதனால், 11 பேர் பலியானதாகவும், 567 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு காவல் துறையின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், 52 காவலர்கள் உள்ளிட்ட 63 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அரசின் ஊழல் மற்றும் அதிபர் வில்லியம் ரூட்டோ பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கைகளுடன் தொடங்கிய இந்தப் போராட்டங்கள், தற்போது காவல் நிலையங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்கள், துப்பாக்கிச் சூடுகள், வாகனங்கள் சேதமடைதல் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளன.
இந்த வன்முறைகள் நடந்து வரும் நிலையில், மனித உரிமை அமைப்புகள், அலுவலக சீருடைகள் இன்றி காவல் துறையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டுகின்றன. இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் கிப்சும்பா முர்கோமென், “மக்கள் பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை போராட்டங்களை அரசு ஒருபோதும் அனுமதிக்காது,” என்றார்.
1990 ‘சப சபா’ நினைவு நாளின் பின்னணி: 1990-ஆம் ஆண்டு ஜூலை 7 அன்று நடைபெற்ற ‘சப சபா’ போராட்டம், கென்யாவை ஒரே கட்சி ஆட்சியிலிருந்து பலகட்சி ஜனநாயகத்திற்கு மாற்றிய பெரும் கட்டமாகும். அதனால், ஜூலை 7 என்ற தேதி, மக்கள் அரசியல் விழிப்புணர்வுக்கான நினைவாக ஆண்டுதோறும் நினைவு கூறப்படுகிறது.
இந்த ஆண்டு அதே நாளில் நடந்த அரசு எதிர்ப்பு போராட்டம், கென்யாவின் தற்போதைய அரசியல் நிலையை மீண்டும் ஒருமுறை விமர்சனத்தின் மையத்துக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த ஜூன் 25ஆம் தேதியன்றும் நடந்த போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்தது, தற்போது மீண்டும் அரசின் பதிலடி நடவடிக்கைகளுக்கு எதிராக விமர்சனங்கள் எழ வைக்கின்றன.
Read more: மாதம் ரூ.55 செலுத்தினால் போதும்.. ரூ.3,000 பென்ஷன் கிடைக்கும்..!! ஓய்வு காலத்தில் கவலையே வேணாம்..