காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய பலரும் இயர்பட்ஸ் பயன்படுத்துவோம். சிலரோ தினமும் ஒரு முறையாவது இந்த பட்ஸை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், காதில் இயர்பட்ஸ்களை பயன்படுத்துவது ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது, உங்கள் காதுகளின் வெளிப்புற பகுதியை சுத்தம் செய்ய மட்டும் பட்ஸை பயன்படுத்தினால் போதும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், காதின் உட்புறத்திற்கு பட்ஸ் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
காதுகளுக்குள் உருவாகும் மெழுகு காதின் பாதுகாப்பிற்கு முக்கியமானது. இது தூசி, நுண்ணுயிரிகளை காதுக்குள் செல்ல விடாமல் தடுக்கிறது. உங்கள் காதுகளின் வெளிப்புறத்தை சுத்தம் செய்ய இயர்பட்ஸ்களைப் பயன்படுத்துவது நல்லது. அதுவே, காதுகளின் உள் பகுதியை சுத்தம் செய்ய அதனைப் பயன்படுத்தும்போது, அது காதுகளுக்குள் உருவாகும் மெழுகு ஆழமாக தள்ளுகிறது. இதனால் காதில் அடைப்பு ஏற்படும். இதனால், காது வலி, காது கேளாமை போன்ற பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உங்கள் காதுகளை சுத்தம் செய்வதற்கு பல வழிமுறை உள்ளன. நீங்கள் குளிக்கும்போது காதுகளில் தண்ணீர் மற்றும் சோப்பு நுழைந்து தேங்கிய காது மெழுகுகளை தளர்த்தும் போது காதுகள் சுத்தம் செய்யப்படும். தளர்ந்த மெழுகு தானே வெளியே வரும். மெல்லுதல், கொட்டாவி விடுதல் மற்றும் பேசுதல் போன்ற உங்கள் தாடை அசைவுகளாலும் மெழுகு வெளியே தள்ளப்படுகிறது. இயர்பட்களை பயன்படுத்துவதால், மெழுகு இறுக்கமாக மாறி அடைப்பு ஏற்படலாம். இதனால் தலைச்சுற்றல், அரிப்பு, காது கேளாமை மற்றும் காதுகளில் வலி போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
உங்களது காதில் இயர்பட்களை பயன்படுத்துவதால் அது பாக்டீரியாவை உள்ளே செல்ல வழி செய்கிறது. இதனால் உங்களுக்கு வலிமிகுந்த நோய்த்தொற்றுகள் ஏற்படும். காது அடைப்பு, காது கேளாமை, காது வலி அல்லது காது பகுதியில் அசௌகரியம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.